சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாமக்கல்லில் நடத்திய ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். வழக்கமாக மாலையில் விடுவிக்கப்படுவதற்கு மாறாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்து நந்தனம் தனியார் மண்டபத்தில் வைத்திருந்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது அனுமதி இன்றி சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் கிண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.