‘அசம் கான் மன்னிப்புக் கேட்டாலும் விட மாட்டேன்’ - ரமா தேவி

‘அசம் கான் மன்னிப்புக் கேட்டாலும் விட மாட்டேன்’ - ரமா தேவி
‘அசம் கான் மன்னிப்புக் கேட்டாலும் விட மாட்டேன்’ - ரமா தேவி
Published on

அசம் கான் மன்னிப்புக் கேட்டாலும், அவரை மன்னிக்க முடியாது என்று துணை சபாநாயகர் ரமா தேவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தொடர்பான விவாதத்தை, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து எம்.பி ரமா தேவி கடந்த ஜூலை 25 ஆம் தேதி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து பேச எழுந்த சமாஜ்வாதி எம்.பி. அசம் கான், ஆபாசமான முறையில் ரமா தேவி குறித்து கருத்து தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிற உறுப்பினர்கள், தரக்குறைவாக பேசியதற்காக அசம் கான் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தினர்.

குறிப்பாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, திமுகவின் கனிமொழி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். எனினும் தனது கருத்துக்கு மன்னிப்புக் கோர முடியாது என்றும் எம்.பி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும் அசம் கான் தெரிவித்தார். 

இதையடுத்து அவர் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும் என அறிவித்திருந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வரும் திங்கள் அன்று பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என அசம் கானுக்கு உத்தரவிட்டார். அவையின் இந்த முடிவுக்கு கட்டுப்படாவிட்டால் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்.

இந்நிலையில், அசம் கான் மன்னிப்புக் கேட்டாலும், அவரை மன்னிக்க முடியாது என்று பாஜக எம்.பி ரமா தேவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “அசம் கான் சபாநாயகர் நாற்காலியை இரண்டு முறை அவமதித்துவிட்டார். முதலில்,  ஆபாசமான கருத்து தெரிவித்த போது, அடுத்ததாக, அதற்கு மன்னிப்புக் கேட்க மறுத்த போது அவர் அவமதித்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் தாய், தங்கை, மகள் மற்றும் மனைவி இருக்கின்றனர். அசம் கான் கருத்து பெண்களை மட்டுமல்ல, ஆண்களின் கண்ணியத்தையும் அவமதித்துள்ளது. 

தன்னுடைய அநாகரிகமான கருத்துக்கான அன்றே அவர் மன்னிப்புக் கேட்டிருந்தால், நான் மன்னித்திருப்பேன். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவரை ஒருபோதும் மன்னிக்க முடியாது. அவருக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com