ஜெயலலிதா, கருணாநிதி மட்டும்தான் ஹெலிகாப்டரில் வரமுடியுமா, நாங்கள் வரமாட்டோமா? - ஹரி நாடார்

ஜெயலலிதா, கருணாநிதி மட்டும்தான் ஹெலிகாப்டரில் வரமுடியுமா, நாங்கள் வரமாட்டோமா? - ஹரி நாடார்
ஜெயலலிதா, கருணாநிதி மட்டும்தான் ஹெலிகாப்டரில் வரமுடியுமா, நாங்கள் வரமாட்டோமா? - ஹரி நாடார்
Published on

ராமநாதபுரம் பரப்புரைக்கு ஹெலிகாப்டரில் வந்த ஹரிநாடார், ஜெயலலிதா - கருணாநிதி - கமல் மட்டுமே பிரசாரத்திற்கு ஹெலிகாப்டரில் வர முடியும் என்கிற பிம்பத்தை உடைப்பதற்காக தான் ஹெலிகாப்டரில் வந்ததாக பேட்டியளித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன் நிறுவனத் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான ஹரிநாடார் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து பனங்காட்டு படை கட்சி சார்பில் தமிழகத்தில் 44 தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மிஸ்ரா நாடார், முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் சதீஷ் நாடார், திருவாடனை தொகுதியில் போட்டியிடும் பெருமாள் நாடார் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஹரிநாடார், ராக்கெட் ராஜா ஆகியோர் ஹெலிகாப்படர் மூலமாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்கினர்.

அங்கு கூடியிருந்த பனங்காட்டுப்படை கட்சி நிர்வாகிகள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். கழுத்து முழுவதும் தங்க நகைகளோடு தங்க மகனாக வந்த ஹரிநாடாரை பார்க்க பெண்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். அவரை காண திரண்டிருந்த இளைஞர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து ஹரி நாடார் செய்தியாளர்களிடம் பேசுகையில்... ஜெயலலிதா, கருணாநிதி, கமல் ஆகியோர் தான் ஹெலிகாப்டரில் வரமுடியும் என்கிற மாயையை முதலில் மக்கள் மத்தியில் உடைக்கவே நாங்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினோம். அரசியல்வாதிகள் யார் சொத்து சேர்க்காமல் உள்ளனர், நான் உழைத்து சம்பாதித்து முறையாக வருமான வரியை கட்டி நகை போட்டுள்ளேன்.

மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் சரியில்லாததாலும், எங்கள் சமுதாயத்திற்கான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதாலும் தான் தேர்தலில் போட்டியிடுகிறோம். பனங்கள்ளை இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதியளிக்காமல் மதுபானத்தை விற்பனை செய்து கொண்டுள்ளனர். பனங்கள்ளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com