அதிமுக விழித்துக் கொள்ளவில்லை எனில் தோல்வியை தழுவும்- சி.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

அதிமுக விழித்துக் கொள்ளவில்லை எனில் தோல்வியை தழுவும்- சி.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
அதிமுக விழித்துக் கொள்ளவில்லை எனில் தோல்வியை தழுவும்- சி.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
Published on

கோயில்கள் தாக்கப்படுவதை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்கின்றார் என்றால் இந்துக்கள் ஓட்டின் முக்கியத்துவம் தெரிந்துள்ளார் எனவும், இந்த விவகாரத்தில் அதிமுக விழித்துக் கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய தோல்வியை தழுவும் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தன போக்குடன் செயல்படுகின்றது. இது கண்டனத்திற்குரியது. கோயில் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினரை சுதந்திரமாக இந்த அரசு செயல்படவிடவில்லை. 3 இடங்களில் கோயில்களில் அம்மன் சேலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்களை மனநிலை பாதிக்கபட்டவர் செய்தார் என கூறுவது ஏற்கும்படி இல்லை. திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறை அதிமுகவும் செய்கிறது. இந்துக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை. பா.ஜ.க நிர்வாகிகள் வீடுகள் முதலான இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கினால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாட பா.ஜ.க தயங்காது. தமிழ் கடவுள் முருகன் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காப்பதால், திராவிட இயக்கங்களுக்கு எதிராக மக்கள் திரள வேண்டிய சூழல் உள்ளது. கோயில்கள் தாக்கப்படுவதை ஸ்டாலின் கண்டிக்கின்றார் என்றால் இந்துகளின் ஓட்டின் முக்கியத்துவம் தெரிந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அதிமுக விழித்துக்கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய தோல்வியை தழுவும். மேலும் கோவில் தாக்கப்பட்டதை கண்டிக்கும் ஸ்டாலினின் மனநிலை உண்மையானதா என்பதை அறிய காத்திருக்கின்றோம். தமிழக அரசுக்கு இன்று முதல் எச்சரிக்கை விடுத்துள்ளோம். மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மத்திய அரசு மூலம் மாநில அரசை நிர்பந்திப்போம். கறுப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கியது வெட்கக்கேடானது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com