மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன், சே.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, பரப்புரை, விருப்ப மனுக்கள் பரிசீலனை எனத் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன. அதேசமயம் புதிதாக தேர்தலை சந்திக்க உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் இருந்து வந்தது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன், சே.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் நீதி மய்யத்தில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யத்துடன் அக்கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிடுகின்றது. பேட்டரி டார்ச் லைட் சின்னத்திலேயே தங்கள் கட்சி போட்டியிடும் என்று சே.கு.தமிழரசன் தெரிவித்தார்.
இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலை பிற்பகல் 2 மணியளவில், கட்சித்தலைவர் கமல்ஹாசன் வெளியிடுவார் எனச் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.