டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகருக்கான சட்டசபை இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் பண விநியோகம் உள்ளிட்ட புகார்களால் ரத்து செய்யப்பட்டது. உகந்த சூழல் வரும் போது ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதியை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி இன்று அறிவித்தார். அப்போது, டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகருக்கான இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் என நம்புவதாக சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.