பூத் சிலிப் இல்லாதவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என தேர்தல் அதிகாரிகள் கூறியதால், திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11-ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டமாக தமிழகம் உள்ளபட 12 மாநிலங்களல் 95 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இதனிடையே பல்வேறு இடங்களில் பல பிரச்னைகளும் நிலவுகின்றன. சென்னையில் அண்ணாநகர் மேற்கு, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், நெல்லை கோடீஸ்வரன் நகர், பூந்தமல்லியில் அறிஞர் அண்ணா வாக்குச்சாவடி மற்றும் தேனி செவன்த் டே பள்ளி வாக்குச்சாவடி, செய்யாறு, ஒட்டன்சத்திரம், நாமக்கல், கோவை சிந்தாநல்லூர் பகுதி வாக்குச்சாவடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுதவிர பல வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகாரும் உள்ளது. இதனால் தங்களது வாக்குச்சாவடி எதுவென்று தெரியாமல் பல வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர். சில இடங்களில் வாக்களிக்கச் சென்றால், தேர்தல் அதிகாரிகள் பூச் சிலிப் கேட்பதாக குற்றச்சாட்டும் உள்ளது. “பூத்சிலிப் இல்லாதவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்.. சிலிப் வாங்கிய பின் வரிசையில் நிற்கவும்” என திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்தவப் பள்ளி 251-வது வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரிகள் கூறியதால் வாக்காளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.