“பா.ஜ.கவில் எனக்கு புதிய பொறுப்பு வழங்குவார்கள்”- ஹெச்.ராஜா

“பா.ஜ.கவில் எனக்கு புதிய பொறுப்பு வழங்குவார்கள்”- ஹெச்.ராஜா
“பா.ஜ.கவில் எனக்கு புதிய பொறுப்பு வழங்குவார்கள்”- ஹெச்.ராஜா
Published on

6 ஆண்டு காலங்கள் தேசிய செயலாளராக பதவி வகித்துவிட்டேன், இனி பாஜகவில் எனக்கு புதிய பொறுப்பு வழங்குவார்கள் என்று பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டியளித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயிலில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா கூறுகையில்...

நான் ஆறு வருடங்களாக பாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்து விட்டேன். தற்போது தலைமை எனக்கு வேறு பொறுப்பை வழங்குவார்கள். இது எங்கள் கட்சி விவகாரம். இதுகுறித்து யாரும் கவலைபட தேவையில்லை

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பது அந்த கட்சியின் உள் விவகாரம், அவர்களுக்குள் நடக்கும் பிரச்னையில் பாஜக தலையிடாது. பிரிந்து கிடந்த அதிமுக அணிகளை இணைத்ததாக ஒருபோதும் பிரதமர் மோடி கூறியது இல்லை” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “அய்யாக்கண்ணு போன்ற போலி விவசாயிகளை கையில் வைத்துக் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக போராட்டங்களை நடத்தி மக்களை திசைதிருப்ப நினைப்பது வேடிக்கையானது. விவசாயிகளின் நலனுக்காக தான் மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி ஒருபோதும் இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால்தான் வேளாண் சட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குப்பையில் தூக்கி எரிவோம் என ராகுல்காந்தி கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு முதலில் தலைவரை தேர்ந்தெடுக்கட்டும், அதன் பின்பு ஆட்சிக்கு வருவதை பற்றி அவர்கள் பேசலாம் என்றவரிடம் உ.பி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

உபியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கண்டனத்துக்குரியதுதான், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்து அரசு உரிய நடவடிக்கை எடுத்துவிட்டது, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதை அரசியலாக்கி ஆதாயம்தேட முயல்கின்றனர், அவர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று என்ன செய்யப் போகிறார்கள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருக்கத்தான் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரையும் அரசு அனுமதிக்கவில்லை என்றும் ஹெச்.ராஜா கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com