குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எலக்ட்ரிக் ஷாக் கிடைக்கும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் தெற்கு குஜராத்தில் 3 நாள் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல்காந்தி இன்று தொடங்கியுள்ளார். ஜாம்புசர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, இந்த தேர்தலில் பாஜகவுக்கு எலக்ட்ரிக் ஷாக் கிடைக்கும் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், “முதல் முறையாக குஜராத் மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியின்மை காணப்படுகிறது. எல்லா இடத்திலும் பாதிப்பு. ஒரு பகுதியில் இருந்து மட்டும் புகார்கள் வரவில்லை. 5 தொழிலதிபர்கள் மட்டும் புகார் கூறவில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக மோடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஏழைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் 10-15 பணக்காரர்களுக்கு மட்டும் செல்கிறது. குஜராத்தில் விவசாயிகள் அழுகின்றனர்.” என்றார்.
மேலும், “மக்கள் உண்மையை உணர்ந்துள்ளனர். குஜராத்தில் அடுத்து அமையும் அரசு விவசாயிகள், ஏழைகள் மற்றும் வியாபாரிகளுக்கான அரசாக இருக்குமே தவிர மோடியின் தொழிலதிபர்களுக்கான அரசாக இருக்காது என்றார். அருண்ஜெட்லி தனது அலுவலகத்தில் இருந்து கொண்டு வெளிநாட்டு கம்பெனிகள் தொழில் செய்வதற்கு ஏதுவாக இந்தியா உள்ளது என்று நம்புவதாகக் கூறிய ராகுல்காந்தி,.அவர் சிறு வியாபாரிகளிடம் சென்று சிக்கல் இல்லாமல் தொழில் செய்வது என்றால் என்ன என்று கேட்டுள்ளாரா?” என்று கேள்வி எழுப்பினார்.