எனது தந்தையின் மறைவிற்குப் பிறகு கோவா மாநிலத்தில் பாஜக ஒரு புதிய வழியில் சென்று கொண்டிருக்கிறது என்று முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தின் முன்னாள் முதலைமைச்சர் மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். அத்துடன் பாரிக்கரின் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அவரது மகன் உட்பல் பாரிக்கர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டார். ஆகவே அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அடன்சியோ மோன்சேரட்டே வெற்றிப் பெற்றார். நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உட்பல் பாரிக்கர் பாஜகவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எனது தந்தையின் மறைவிற்குப் பிறகு பாஜக வேறு ஒரு புதிய வழியில் சென்று கொண்டுள்ளது. ஏனென்றால் என்னுடைய தந்தை இருந்தபோது பாஜகவின் செயல்பாடுகளில் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை முக்கியமான ஒன்றாக இருந்தன. ஆனால் தற்போது அது மாறியுள்ளது. இந்தப் புதிய பாதை நல்லதா என்று என்னால் கூறமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.