பூனே விழாவில் ஆத்திரமூட்டுகிற வகையில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்று தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏ கூறினார்.
பீமா கோரேகான் போர் வெற்றியின் 200-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி பூனேவில் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் சார்பில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் குஜராத் வத்காம் தொகுதியின் எம்.எல்.ஏவும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார். விழாவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் ஆகிய இருவரின் மீதும் பூனே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ கூறுகையில், வன்முறையைத் தூண்டும் வகையில் தான் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை, எதிர் தரப்பினரால் தான் குறிவைக்கப்பட்டிருக்கிறேன். சங் பரிவார் அமைப்பு மற்றும் பாஜகவைச் சேர்ந்த சில நபர்கள், என் மீது களங்கத்தை ஏற்படுத்த இதுபோன்ற குழந்தைத்தனமான செயலில் ஈடுபடுகின்றனர். குஜராத் தேர்தல் முடிவுகள் மற்றும் வரும் 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பயந்து இதுபோன்ற களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ கூறினார்.