அடேங்கப்பா! தலைசுற்ற வைக்கும் பாஜகவின் தேர்தல் நிதி
தேர்தல் அறக்கட்டளைகளின் கடந்த 4 ஆண்டு நன்கொடையில் பாஜகவிற்கு மட்டும் 76.7% வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017 வரை தேர்தல் அறக்கட்டளைகளின் மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக ரூ.637.54 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறிகிறது. இந்த மொத்த தொகையில், பாஜகவிற்கு மட்டும் ரூ.488.94 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது மொத்த நன்கொடையில் 76.7% ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு 4 ஆண்டுகளில் ரூ.86.65 கோடி கிடைத்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு 61.94 கோடி கிடைத்துள்ளது.
4 ஆண்டுகளின் மொத்த நன்கொடை தொகையில் தேசிய கட்சிகளுக்கு மட்டும் ரூ.588.44 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது 92.30% ஆகும். மாநில கட்சிகளை பொறுத்த வரையில் ரூ.49 கோடி அல்லது 7.70% மட்டுமே நன்கொடையாக பெற்றுள்ளன. தமிழகத்தில் திமுக ரூ.53 லட்சம் பெற்றுள்ளது. தேர்தல் அறக்கட்டளைகளின் நன்கொடைகளை ஆண்டுவாரியாக பிரிக்கும் போது, 2013-14ல் ரூ.85.37 கோடி, 2014-15ல் ரூ.177.40 கோடி, 2015-16ல் ரூ.49.50 கோடி, 2016-17ல் ரூ.325.27 கோடி என வழங்கப்பட்டுள்ளது. இதில் 2016 முதல் 2017 வரை வழங்கப்பட்ட ரூ.325.27 கோடியில், பாஜகவிற்கு மட்டும் ரூ.290.22 கோடி கிடைத்துள்ளது. இது 89.2% ஆகும். காங்கிரஸுக்கு ரூ.14.90 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கார்ப்ரேட் கம்பெனிகள் மற்றும் தனி முதலாளிகளை உள்ளடக்கியது தான் தேர்தல் அறக்கட்டளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.