பாஜக தேர்தல் வாக்குறுதிகள்: சொன்னதும்; செய்ததும் என்ன?

பாஜக தேர்தல் வாக்குறுதிகள்: சொன்னதும்; செய்ததும் என்ன?
பாஜக தேர்தல் வாக்குறுதிகள்:  சொன்னதும்; செய்ததும் என்ன?
Published on

2. பெண்கள் முன்னேற்றம் 

பாஜகவின் ஊழல் தடுப்புக்கான வாக்குறுதிகள் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். இந்தப் பதிவில் பெண்கள் முன்னேற்றம் குறித்து பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் என்ன? அவை எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது பற்றி பார்ப்போம். 

முதலில், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் ஒரு அமர்வில்கூட இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவே  இல்லை.

இரண்டாவதாக, பாஜக ஆட்சியில் பெண்களுக்கான முக்கிய திட்டமான “பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ”வின் (மகளை வளர்ப்போம். மகளை படிக்க வைப்போம்) செயல்பாடு சிறப்பாக இல்லை என்பதாகவே கூறப்படுகிறது. ஏனென்றால், உலக பொருளாதார மன்றத்தின், 2018 ஆண்டு உலக பாலின இடைவெளிக்கான அறிக்கையில் பெண்களுக்கான சுகாதாரத்தில் 149 நாடுகளில் இந்தியா 147 இடத்தில்தான் இடம் பிடித்துள்ளது. இந்த அறிக்கையில் பெண்களுக்கான சுகாதாரத்தில் ‘பாலின விகிதம்’ கணக்கிடப்பட்டுள்ளது. ‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ”திட்டத்தின் முக்கிய அம்சம் பெண் பாலின படிப்பு விகிதத்தை மேம்படுத்துவதே. அதனால் இந்தத் திட்டம் தன் முக்கிய அம்சத்தில்கூட இதுவரை கவனம் செலுத்தவில்லை என்றே தெரியவந்துள்ளது.

மூன்றாவதாக, பாஜகவின் தேர்தல் அறிக்கை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கூறியுள்ளது. குறிப்பாக பாலியல் குற்றங்கள் மீதாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவின்படி பார்த்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2012இல் 41.7 சதவிகிதத்திலிருந்து 2016இல் 55.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

நான்காவது, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான தற்காப்புக் கலை என்பது பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றனர். ஆனால் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தற்போது பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை தாண்டி பாஜக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சில முக்கிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதில் முதன்மையானது, பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு. பல காலமாக 12 வாரங்களாக இருந்து வந்த விடுப்பை, 26 வாரங்களாக உயர்த்தி வழங்கியது இந்த ஆட்சியில்தான். 

மேலும் பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் புகார்கள் பற்றி தெரிவிக்க “SHe-Box”என்ற இணையதள புகார் மையமும் அமைக்கப்பட்டது. அதேபோல், சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்களுக்கெதிரான கேளி, கிண்டல்கள் பற்றி புகார் அளிக்க #HelpMeWCD என்ற ஹேஷ்டேக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இறுதியாக, பாஜக அரசு பெண்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாக பல திட்டங்களை வகுத்திருந்தாலும் அந்தத் திட்டங்கள் யாவையும் பெரிதாக பலன் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், மத்திய அரசின் 2017-18க்கான பொருளாதார ஆய்வறிக்கை தகவலின்படி பார்த்தால், தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்கு என்பது குறைந்துள்ளது. இந்த அறிக்கையின் படி பெண்களின் பங்கு 2004-05இல் 35 சதவிகிதத்திலிருந்து 2015-16இல் 24 ஆக குறைந்துள்ளது. இந்தக் குறைகளை மீறி பாஜக பெண்கள் முன்னேற்றத்தில் கடந்து வரவேண்டிய தூரம்  இன்னும் அதிகமாகவே உள்ளது. 

சரி, வேலைவாய்ப்பு குறித்து பாஜகவின் வாக்குறுதிகள் என்ன? 

அதுவரை வெயிட் அண்ட் சி...     

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com