தமிழகத்தில் கட்சி நிர்வாகிகளின் அர்ப்பணிப்பை பார்க்கும் போது வரும் தேர்தலில் பாஜக தான் முக்கிய இடம் வகிக்கும் என்பது தெளிவாக தெரிவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை மதுரவாயலில் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டார். புதுப்பானையில் அரிசி, வெல்லம் ஆகியவற்றை இட்டு பொதுமக்களுடன் சேர்ந்து நட்டா பொங்கல் வைத்து மகிழ்ந்தார். தொடர்ந்து பாஜகவின் கலாச்சார பிரவு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஜெ.பி.நட்டாவுக்கு வெள்ளி வேலை பரிசாக அளித்தார். அப்போது மேடையில் பேசிய அவர், இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் உழைப்பை, அர்ப்பணிப்பை பார்க்கும் போது வரும் தேர்தலில் பாஜக முக்கிய இடம் வகிக்கும் என்பது தெளிவாக தெரிவதாக அவர் கூறினார்.
ஜெ.பி.நட்டா பேசுகையில், “பாரதிய ஜனதா கட்சியிலும், ஆட்சியிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால் தான் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள், மாற்று கட்சியினர் தொடர்ந்து பாஜகவில் இணைகின்றனர். அவர்களை ஒன்றிணைத்து பணியாற்ற வேண்டும். எதிர்காலத்தில் பாஜக தமிழகத்தில் மிக முக்கிய கட்சியாக மாறும்” என்றார்.
இதனையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெ.பி.நட்டா கலந்து கொண்டார்.