அம்பத்தூரில் பாஜகவிற்கு ஓட்டுபோட அழைப்பிதழ் வைத்து பாஜக பெண் வேட்பாளர் ஒருவர் அழைப்பு விடுத்துவருகிறார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுகவிற்கு ஈடாக பாஜகவினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் 7வது மண்டலத்தில் உள்ள 85வது வார்டில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் தேன்மொழி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவர் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி, வரதராஜபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகளிம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவரும் வகையில் விதவிதமான அணுகுமுறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் கடை மற்றும் வீடுகளுக்குச் சென்று திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதுபோல் தேர்தல் அழைப்பிதழ் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களில் வாங்குபவரின் பெயரை எழுதி கொடுத்து நூதன பரப்புரை செய்து வருகிறார் தேன்மொழி.
அந்த அழைப்பிதழில் 5 தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து, அதாவது, 85வது வட்டத்திலுள்ள முதியோர்கள் மற்றும் விதவை பெண்களுக்கு உடனடியாக அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் பெற்றுத் தருவேன். அதேபோல மத்திய அரசின் இலவச வங்கி கணக்கு, இலவச எரிவாயு, ரூபாய் 5 லட்சம் மருத்துவ காப்பீடு என மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் சென்றடைய பணியாற்றுவேன் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து அருகிலுள்ள டீக்கடைக்குச் சென்று பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.