மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் ஹிஜாப் உடையை அகற்றுமாறு கூறி மிரட்டியதாக பாஜக முகவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மேலூர் அல் அமின் உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்ட நகராட்சிக்குட்பட்ட 8- வது வார்டு வாக்குச்சாவடியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட அம்சவேணியின் மகன் கிரிநந்தன் அக்கட்சியின் பூத் ஏஜென்டாக இருந்தார். அப்போது அவர், அங்கு வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் ஹிஜாப் உடையை அகற்றிவிட்டு வந்து வாக்களிக்கும்படி கூறி மிரட்டியதாக தெரிகிறது.
இதற்கு அங்கிருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாக்குப்பதிவை நிறுத்தி வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாஜக ஏஜென்ட் கிரிநந்தனை காவல்துறையினர் வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றினர். பின்னர், அவருக்கு பதிலாக வேறு முகவர் நியமிக்கப்பட்டதை அடுத்து, வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், கிரிநந்தன் மீண்டும் வாக்குச்சாவடிக்கு சென்று சண்டையிட முயற்சித்ததால், காவல்துறையினருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
வாக்குச்சாவடி செயல் அலுவலர் நேதாஜி, மேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக ஏஜென்ட் கிரிநந்தன் மீது மதத்தின் உணர்வை புண்படுத்துதல் , மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரை இழிவுபடுத்தும் படி பேசுதல் , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் அவரை கைது செய்தனர்.