கொரோனா பரவல் சூழலில் இந்தியாவில் இருப்பதை பாதுகாப்பாக உணரவில்லை என்று ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஆஸ்திரேலியா சென்ற ஆர்சிபி வீரர் ஆடம் ஜாம்பா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனும், சுழற்பந்துவீச்சாளருமான ஆடம் ஜாம்பாவும் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா சூழல் அதகரித்ததன் விளைவாகவே அவர்கள் விலகினார்கள் என கூறப்பட்டது.
இது குறித்து ஆடம் ஜாம்பா இப்போது பேசியுள்ளார், அதில் "கடந்த முறை ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்றது. அங்கு முழுவதும் பாதுகாப்பாக உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில் இந்தாண்டும் ஐபிஎல் தொடரை துபாயில் நடத்தி இருக்கலாம் என்பது என் கருத்து. ஆனால் அதில் நிறைய பிரச்னைகள் இருப்பதும் எனக்கு தெரியும். அடுத்த 6 மாதத்தில் இந்தியாவில் டி20 உலகக் கோப்பையும் நடக்கவிருக்கிறது. மேலும் பல மாதங்களாக பயோ பபுள் பாதுகாப்பில் இருப்பது அயர்ச்சியை தருகிறது" என்றார்.
மேலும் பேசிய அவர் "பல மாதங்களாக குடும்பத்துடன் இல்லாமல் இருக்கிறோம். பல நாடுகளில் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வருகிறது. இதையெல்லாம் மனதில் வைத்தே உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். பலரும் சொல்கிறார்கள் இப்போதுள்ள சூழ்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் பலருக்கு ஓர் ஆறுதலாக இருக்கும் என்று. ஆனால் சொல்பவர்களின் குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தால் கிரிக்கெட் குறித்து கவலைப்படமாட்டார்கள் என நினைக்கிறேன்" என்றார் ஆடம் ஜாம்பா.
இறுதியாக பேசிய அவர் "ஐபிஎல்லுக்காக சில வாரங்களாக பயோ பபுளில் இருக்கிறோம். ஆனால் நான் இங்கு பாதுகாப்பாக உணரவில்லை. ஒருவேளை இது இந்தியாவாக இருப்பதால் எனக்கு இப்படி நினைக்க தோன்றுவதாக நினைக்கிறேன். இந்தியாவில் சுத்தம் சுகாதாரம் எப்படிப்பட்டது என சொல்லி வளர்க்கப்பட்டதால் இங்கு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. அதனால் இந்த பயோ பபுள் பாதுகாப்பு வளையம் பாதுகாப்பானதாக எனக்கு தோன்றவில்லை" என்றார் ஆடம் ஜாம்பா.