ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ 4.66 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பவானிசாகர் சட்டமன்ற தொகுதி, பண்ணாரி அடுத்த புதுகுய்யனூரில் ராஜன்நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் காரினுள் ரூ 4.66 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வாகனத்தில் வந்தவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரைச் சேர்ந்த ஜி.எம்.ஹெக்டே என்பதும் அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பவானிசாகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் சத்தியமங்கலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.