தேனி மாவட்டத்தில் கீழே கிடந்த பணம் மற்றும் மோதிரம் உள்ளிட்டவற்றை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சார்பில் சான்றிதழ்களுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கேத்தன் பட்டேல் ஏடிஎம் சென்றபோது, கீழே கிடந்த 4 லட்சத்தை கைப்பற்றி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் இப்பணம் வங்கி ஊழியர்கள் வங்கியில் பணம் நிரப்பும் போது தவறவிட்டது என்பது தெரிய வந்தது. அதேபோல வருசநாடு பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி மற்றும் மகேந்திரன் ஏடிஎம் மையத்தில் இருந்த 1 லட்சம் ரூபாயை கம்பம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கம்பம் பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அவரது நண்பர் அப்துல் காதர் ஆகியோர் கீழேக் கிடந்த தங்க மோதிரத்தை மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் நல்லெண்ணத்தை பாராட்டும் வகையில் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி சார்பில் அவர்களுக்கு சான்றிதழ்களுடன் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.