பர்கூரில் வேட்பாளரை மாற்ற கோரியும். திமுக மாவட்ட பொறுப்பாளரை கண்டித்தும் திமுக தொண்டர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி திமுக ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் கோவிந்தராஜன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் சி.வி ராஜேந்திரன் என்பரிடம் 900 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கடந்த ஐந்து வருடங்களாக திமுகவிற்கு கடும் பணியாற்றி பர்கூரை திமுக கோட்டையாக மாற்றியவர் என கோவிந்தராசன் பெயர் பெற்றார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அப்போது பர்கூர் வேட்பாளராக கோவிந்தராஜனை அறிவிப்பார் என எதிர்பாத்து பட்டாசு வெடிக்க கோவிந்தராஜனின் ஆதரவாளர்கள் காத்திருந்தனர்.
ஆனால் மதியழகன் பெயரை வேட்பாளராக அறிவித்ததும் கோபமடைந்த திமுகவினர் பர்கூர் பேருந்து நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து வேட்பாளரை மாற்றக் கோரியும், மாவட்ட பொறுப்பாளர் செங்கூட்டுவனை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்வு பர்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.