நடப்பு சீசனில் அசுர வளர்ச்சி கண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்த அலசல்.
கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூர் அணி நடப்பு சீசனில் பெரும் எழுச்சி பெற்றுள்ளது. பேட்டிங்கில் படிக்கல், ஃபின்ச், டிவில்லியர்ஸ் ஆகியோர் அபார ஆட்டத்திறனுடன் உள்ளனர். கேப்டன் கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு அசுர பலம். ஆல்ரவுண்டர் தூபே பேட்டிங்கில் பக்கபலம். பந்துவீச்சில் ரன் வேகத்தை கட்டுப்படுத்த சைனி, வாஷிங்டன் சுந்தர் அஸ்திரமாக உள்ளனர். உதானா, ஆடம் ஸாம்பா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை வாரி வழங்குவது பலவீனம். இருப்பினும் இப்போது ஆடும் லெவன் அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்து வருவதால், அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தெரிகிறது.
வலுவான பேட்டிங் மேல்வரிசை, பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு என அசத்தலான ஃபார்மில் உள்ளது டெல்லி அணி. ஷிகர் தவன், பிரித்வி ஷா, ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த் ஆகியோர் பேட்டிங்கில் அணியின் தூண்களாக உள்ளனர். மத்திய வரிசையில் ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் மற்றும் ஹெட்மெய்ர் வலு சேர்க்கின்றனர்.
ரபாடா மற்றும் நாட்ஜ் வேகப்பந்து வீச்சின் மூலம் எதிரணியினரை திணறடித்து வருகின்றனர். அமித் மிஸ்ரா முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த பக்கபலமாக உள்ளார். ஸ்டய்னிஸ், ஹர்ஷல் படேல் ஆகியோர் ரன்களை அதிகளவில் விட்டுக்கொடுப்பது டெல்லி அணிக்கு சிக்கல்.
நடப்பு சீசனில் கோப்பையைக் கூட கைப்பற்றும் திறன் கொண்ட அணிகளாக கருதப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது