ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பயன்படுத்தப்படும் பந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகள்.
கிரிக்கெட் போட்டிகளில் 3 விதமான பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. டெஸ்ட் போட்டிகளுக்கு சிவப்பு நிற பந்துகளும், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கு வெள்ளை நிறப்பந்துகளும், பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு பிங்க் நிறப்பந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இப்பந்துகளின் வகைகள் குக்குபுரா, டியூக்ஸ், எஸ்ஜி என மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படுபவை வெள்ளை நிற குக்குபுரா பந்துகள். ஒரு பந்தின் விலை 12 ஆயிரத்து 366 ரூபாய் என தெரிகிறது. சீசன் தொடங்கும் 30 நாட்களுக்கு முன்னரே முழு தொடருக்குமான பந்துகள் தயாரிக்கப்பட்டு விடுவதாக கூறப்படுகிறது. போட்டிகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் ஒரு புதிய பந்து கொடுக்கப்படும். அணியின் கேப்டன்களிடம் போட்டியின் நடுவர் 6 பந்துகளை காண்பித்து ஒன்றை தேர்வு செய்ய கூறுவார்.
இடைவேளை நேரம், விக்கெட்டுகள் விழும் போது நடக்கும் கொண்டாட்டங்கள் மற்றும் போட்டி பாதிக்கப்படும் சமயங்களில் பந்து நடுவர்களிடமே ஒப்படைக்கப்பட்டு விடும். மைதானத்திற்கு வெளியே விளாசி அடிக்கப்பட்டு தொலையும் போதும், ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிக்குள் சிக்கி சேதம் அடைந்து வரும் போதும் பந்துகள் மாற்றப்பட்டு விடும். ஆனால் அவ்வாறான சூழல்களில் புதிய பந்துகள் வழங்கப்படாது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட, அதாவது தொலைந்த அல்லது சேதமடைவதற்கு முன்பு அந்த பந்து எவ்விதமான தரத்தில் இருந்ததோ அதே போன்றதொரு பந்தே வழங்கப்படும்.
நடப்பு சீசனில் அதிரடி மன்னர்கள் அடிக்கடி மைதானத்திற்கு வெளியே அடித்து விளாசி வருகின்றனர். மைதானத்திற்கு வெளியேயும் ஃபீல்டர்களை நிறுத்த வேண்டும் என்று சிந்திக்க வைக்கும் அளவிற்கு பந்துகள் துவம்சம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் முன் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு நடப்பு சீசனில் அதிக எண்ணிக்கையிலான பந்துகள் பயன்படுத்தப்படும் எனவே எதிர்பார்க்கபடுகிறது.