உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், 255 தொகுதிகளை கைப்பற்றி பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாரதிய ஜனதா முன்னணி வகித்து வந்தது.
சற்றே சரிவுதான்; ஆனால் அறுதிப்பெரும்பான்மை - பாஜக அபார வெற்றி
கடந்த முறை 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியிருந்த பாரதிய ஜனதாவுக்கு இந்தத் தேர்தலில் சற்று சரிவு ஏற்பட்டது. எனினும் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், 255 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்று தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது பாரதிய ஜனதா. இதன் காரணமாக யோகி ஆதித்யநாத் தலைமையில், உத்தரப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமையவுள்ளது.
வெற்றிகளை குவித்த பாஜக கூட்டணி கட்சிகள்:
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அப்னா தளம் 12 தொகுதிகளிலும், நிர்பல் இந்தியன் சோஷித் ஹமாரா ஆம் தள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதன் மூலம் பாரதிய ஜனதா கூட்டணி ஒட்டுமொத்தமாக 273 இடங்களை கைப்பற்றியுள்ளது. கூட்டணிக்காக 27 இடங்களை விட்டு கொடுத்த பாரதிய ஜனதா 376 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது.
இதில், கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சுபவதி சுக்லாவை வீழத்தி மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். அதே நேரம் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா, சமாஜ்வாதி வேட்பாளர் பல்லவி படேலை விட ஆயிரத்து 336 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த தேர்தலின்போது 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பெற்றிருந்த அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சி இம்முறை 111 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
32.5 சதவீத வாக்குகளை குவித்த சமாஜ்வாதி:
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த தேர்தலில் பாரதிய ஜனதா 41 புள்ளி 3 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தை விட இது சற்றே அதிகம். சமாஜ்வாதி கட்சிக்கு இந்த முறை 32 புள்ளி பூஜ்யம் 5 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 12 புள்ளி 7 சதவிகிதமும், ராஷ்ட்ரிய லோக் தள கட்சி 3 புள்ளி பூஜ்யம் 3 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சிக்கு 2 புள்ளி மூன்று எட்டு சதவிகிதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.
2017 தேர்தல் நிலவரம்:
கடந்த 2017 ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 312 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் ஒன்பது இடங்களிலும், சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. பகுஜன் சமாஜ் 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், பிற கட்சிகள் ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.