வகைத்தொகை இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறுவோர் ஏராளமானோர் இந்தியாவில் இருப்பார்கள். அதுவும் நடைப்பாதை நடப்பவர்களுக்கே என பெரிய பெரிய எழுத்துகளில் பலகைகள் பொருத்தப்பட்டாலும், Life is a race.. run.. run.. என்பது போல டூ வீலரில் செல்வோர் பெரும்பாலும் நடைபாதையில் வண்டியை ஓட்டிச் செல்வதை காண முடியும்.
அதேபோல ரயில் வரும் தண்டவாளத்தில் ஆபத்தை உணராமல் மக்கள் ஒய்யாரமாக நடந்து செல்வது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாவது வாடிக்கை.
இப்படி இருக்கையில், நெடுஞ்சாலைகளில் சாலையை கடக்கும் சமயத்தில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதசாரிகள் நடப்பதற்கென மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த மாதிரியான மேம்பாலத்தில் ஆட்டோ ரிக்ஷா ஒன்று சுலபமாக சாலையை கடந்து செல்லும் வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
இந்த நிகழ்வு மகாராஷ்டிராவின் பாகல்புர் மாவட்டத்தின் மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடந்திருக்கிறது. நடைபாதைக்காக வைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் ஆட்டோ ரிக்ஷா சென்ற வீடியோ வைரலானதால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் தரப்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோ 5 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இதனை பகிர்ந்த நெட்டிசன்கள், கூகுள் மேப்பை சீரியசாக நம்பி சென்றதன் விளைவாகத்தான் இருக்கும் என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.