ராஜஸ்தான் தேர்தலில் பாஜக தோற்று முதல்வர் வசுந்தரா ராஜே பதவியிழந்ததை அடுத்து தற்போது இந்தியாவில் ஒரே பெண் முதலமைச்சர் என்ற பெயரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெற்றுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு தொடக்கத்தில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, வசுந்தரா ராஜே, மெகபூபா முப்தி, ஆனந்தி பென் பட்டேல், என 5 பெண் முதல்வர்கள் இருந்தனர், இதில் ஜெயலலிதா மரணமடைந்துவிட்ட நிலையில், ஆனந்திபென் பட்டேல் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுவிட்டார்.
அதனையடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் மம்தா பானர்ஜி, வசுந்தரா ராஜே, மெகபூபா ஆகிய மூன்று பெண் முதல்வர் பதவியில் இருந்தனர். வசுந்தரா ராஜே, மெகபூபா ஆகியோர் ஆட்சியை இழந்துவிட்டனர். இந்நிலையில் மம்தா பானர்ஜி மட்டுமே பதவியில் எஞ்சியுள்ளார். தேசிய அரசியலில் மம்தா வலுவான நிலையில் உள்ளார். 2011 முதல் மம்தா மேற்கு வங்க முதல்வராக உள்ளார். இரண்டாவது முறையாக முதல்வர் பதவி வகித்து வரும் மம்தாவுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.
இந்தியாவில் இதுவரை பெண் முதல்வர்களாக 16 பேர் பதவி வகித்துள்ளனர். இதுவரை 13 மாநிலங்களில் பெண் முதல்வர்கள் இருந்துள்ளார்கள். இதில், தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் இரண்டு பெண்கள் முதல்வர்கள் பதவியில் இருந்துள்ளார்கள். 5 பெண் முதல்வர்களை கொடுத்த கட்சியாக காங்கிரசும், 4 பெண் முதல்வர்களை பாஜகவும், 2 பேரை அதிமுகவும் கொடுத்துள்ளன.
நாட்டின் முதல் பெண் முதல்வராக உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சுசேதா கிரிபலானி பதவி வகித்தார். 1963 முதல் 1967 வரை அவர் பதவியில் இருந்தார். டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்ஷித் தான் அதிக ஆண்டுகள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஆவார். அவர் 1998 முதல் 2013 வரை டெல்லி முதல்வராக பதவி வகித்தார்.