இலங்கையில் பெட்ரோலியத்துறை அமைச்சக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா திடீரென பிரதமராக பதவி பிரமாணம் செய்து வந்தார். ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். சபாநாயர் ஜெயசூர்யாவும் ராஜபட்சவை ஏற்க முடியாது என்று தெரிவித்து இருந்தார். இதனால், ஒரு நாட்டிற்கு ஒரே நேரத்தில் இரண்டு பிரதமர்களா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு நடுவே இலங்கை பிரதமராக ராஜபட்ச இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பிரதமர் அலுவலக பணிகளையும் அவர் மேற்கொள்ள தொடங்கினார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும் வரை இந்த பிரச்னை முடிவுக்கு வராது.
இதனிடையே, ரணில் விக்ரமசிங்கே அரசியல் அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க கொழும்புவில் உள்ள தன்னுடைய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, ஆவணங்கள் சிலவற்றை எடுக்க முயன்ற போது, அவரை ராஜபட்ச ஆதரவாளர்கள் சிலர் தடுக்க முயன்றுள்ளனர். ரணதுங்கவை கடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ரணதுங்கவின் பாதுகாவலர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், பெட்ரோலியத்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற தகராறு தொடர்பாக அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் விக்ரமசிங்கே ஆதரவாளருமான ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளது இலங்கை அரசியல் பரபரப்பை கூட்டியுள்ளது.