அரியாலூரில் தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மனைவி தமிழரசி. தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்திவரும் தமிழரசி கடையில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தை தூரத்தில் நிறுத்தி விட்டு கடைக்கு வந்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்தவர், அவர் நிறுத்தியிருந்த வாகனத்தின் அருகே சென்று மீண்டும் கடைக்கு வந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார்.
பின்னர் மீதி சில்லறைகளை பெற்றுக்கொண்டவர் மேலும் பத்து ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளார். சில்லறை கொடுப்பதற்காக தமிழரசி குனிந்த போது கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை இழுத்துள்ளார். சுதாரித்துக்கொண்ட தமிழரசி தாலியை கெட்டியாக பிடித்துக்கொள்ள மற்றொருசெயினை மட்டும் பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இந்த நபர் கடையில் இருந்த பெண்ணிடம் தான் ஒரு அதிகாரி எனக்கூறி புகையிலை பொருட்களை விற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது மீறி ஏன் விற்பனை செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். பின்னர் ஒரு சீட்டில் குறிப்பெடுத்துக் கொண்டு நாளை நோட்டீஸ் வரும் அதற்கு ரூ. 5000 அபராதம் கட்ட நேரிடும் என சொன்னதாக தெரிகிறது.
உடனே கடையில் இருந்த பெண்மணி விஜயா தனது மகனுக்கு போன் செய்கிறேன் என கூறியவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறுகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த செயின் பறிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.