அலங்கார வளைவு மோதி கோவை இளைஞர் ரகு இறக்கவில்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பாக நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இளைஞர் ரகு இறந்த சம்பவம் மன வேதனை அளிக்கிறது. அலங்கார வளைவு மோதி அவர் இறக்கவில்லை, லாரி மோதிய விபத்தில் சிக்கி இறந்திருக்கிறார்” என்று கூறினார்.
மேலும், ரகு விபத்தில் இறந்ததற்கான சிசிடிவி ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளன. உண்மை இப்படி இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான தகவல்களை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். எழுச்சியான நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற நோக்கில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்” என்று கூறினார்.
கட்-அவுட் பேனர் வைப்பது கட்சிக்காரர்களின் எழுச்சியைக் காட்டுவதாகும். அதிமுகவின் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர், இதுபோன்ற தவறான பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். அதோடு, திமுக ஆட்சி காலத்தில்தான் அதிக அளவில் கட்-அவுட் பேனர்கள் வைக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். அப்போது, திமுக காலத்தில் வைக்கப்பட்ட பேனர்கள் சில மேடையில் உள்ள டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டன.