ஆப்பிள் நிறுவனத்தின் ஐவாட்ச்சால் பலரது உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது தொடர்பான பல செய்திகள் தொடர்ந்து தெரிய வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, ஐவாட்ச்சில் இருக்கும் ஆக்சிஜன் அளவு சரிபார்ப்பது, இதய செயல்பாடுகளை அறிவது போன்ற முக்கியமான அம்சங்களால் உயிர் பிரியும் தருணத்தில் இருப்பவர்கள் கூட தக்க சமயத்தில் பிழைத்திருப்பது பற்றி அறிந்திருப்போம்.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பாள ஏர்டேகை வைத்து காணாமல் போன செல்லப்பிராணி நாயை அதன் உரிமையாளர் மீட்டிருக்கும் சம்பவம் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் அரங்கேறி இருக்கிறது. apple insider-ன் கூற்றுப்படி, டெனிஸ் என்ற பெண் ஒருவர் தன்னுடைய நாய் காணாமல் போனதை அது பிரிந்த ஒரு மணிநேரத்திற்கு பிறகே கவனித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியுள்ள அந்த பெண், “நான் குப்பையை கொட்ட வெளியே சென்றிருந்தேன். அந்த சமயத்தில் குப்பையை வெளியே எடுக்கும் போதுதான் தப்பியிருக்கக் கூடும் என நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து நாயின் காலரின் மாட்டப்பட்டிருந்த ஏர்டேகில் உள்ள ஜி.பி.எஸ் டிராக்கர் உள்ளதை உணர்ந்த டெனிஸ், உடனடியாக அது இருக்கும் இருப்பிடத்தை அறிந்திருக்கிறார். அதன்படி, வீட்டில் இருந்து சுமார் 20 நிமிட தொலைவில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் தன்னுடைய வளர்ப்பு நாய் இருப்பதை அறிந்து அங்குச் சென்று அதனை மீட்டிருக்கிறார்.
இதேப்போன்று கடந்த ஜூன் மாதம் கனடாவில் திருடப்பட்ட தனது ரேஞ்ச் ரோவர் காரை ஆப்பிள் ஏர்டேக் கொண்டு கண்டுபிடித்திருக்கிறார். தனது suv காரில் 3 ஏர்டேக்களை இணைத்திருந்ததால் அதன் மூலம் காவல் துறைக்கு தெரியப்படுத்தி வாகனம் இருக்கும் இடத்தை அறிய முடிந்திருக்கிறது என உரிமையாளர் கூறியிருந்தார். ஐவாட்ச், ஏர்டேக் போன்ற சாதனங்களால் பல நன்மைகள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் விதிக்கும் விலைதான் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.