இந்தியாவிற்கு இது உண்ணாவிரத காலம் போலிருக்கு. தொடர்ச்சியாக ஒவ்வொரு கட்சியாக உண்ணாவிரதப் போராட்டங்களை அறிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு போராட்டத்திலும் ஒவ்வொரு விதமான சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறி வருகின்றன. இதில் ஹைலட் ஆனது தமிழகத்தில் ஆளும் கட்சி நடத்திய உண்ணாவிரதம் தான். உண்ணாவிரதப் போராட்டம் காவிரி விவகாரத்தில் மத்திய அரசினை கண்டித்து நடைபெற்றது. ஆனால், உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்தது வேறு கதை. ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அக்கட்சியினர் சிலர் உண்ணாவிரதத்திற்கு இடைவெளி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, அன்று முழுவதும், சமூக வலைதளங்களில் அது தான் ட்ரெண்ட்.
அதிமுகவை அடுத்து உண்ணாவிரதம் நடத்தியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி வேறு விதமாக சிக்கியது. நாடாளுமன்றம் முடங்கியதை கண்டித்தும், மத்திய அரசின் தலித் விரோதப் போக்கை கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் உண்ணாவிரதத்திற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் டிபன் சாப்பிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் டிபன் சாப்பிடும் புகைப்படங்களை பாஜக கட்சியினர் தீயாக பரப்பினர். அந்தப் படங்களும் அன்று முழுவதும் டிரெண்டு தான். அதனை மறுக்காத காங்கிரஸ் 10 மணிக்கு உண்ணாவிரதம் நடைபெறவிருந்த நிலையில் நாங்கள் சாப்பிட்டது 8 மணிக்கு என்று காங்கிரஸ் கூறிய விளக்கம் சிறுபிள்ளைதனமாக இருந்தது என பலரும் விமர்சித்தனர்.
காங்கிரஸை அடுத்து பாஜகவினர் நடத்திய உண்ணாவிரதத்திலும் ஒரு ரகளை நடந்தது. நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை கண்டித்து இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநில பாஜகவைச் சேர்ந்த சஞ்சய் பிகாடே மற்றும் பீம்ராவ் தப்கீர் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதத்திற்காக அனைவரும் கூடியிருக்கும் இடத்தில் வைத்தே சான்விச் உள்ளிட்ட உணவுகளை ரசித்து உணவருந்தியுள்ளனர். இந்தக் காட்சிகளின் வீடியோக்களை விட்டு வைப்பார்களாக காங்கிரஸ் கட்சினர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் இதனை வைரலாக்கிவிட்டனர்.
அதிமுக தொடங்கி வைத்த சுவாரஸ்ய உண்ணாவிரதம், அனைத்துக் கட்சிகளையும் ஆட்கொண்டுள்ளது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஏப்ரல் 20ம் தேதி ஒருநாள் மட்டும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரின் உடல்நிலை மோசமான நிலையில் கடந்த புதன்கிழமை (ஏப்.11) உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக தற்போது ஆளும் தெலுங்கு தேசம் களத்தில் குதித்துள்ளது.