’ரெய்டு நடத்தி அச்சுறுத்துவது தன்னிடம் நடக்காது. ஒரு ஊழலுக்கு மாற்றாக மற்றொரு ஊழலை தேர்ந்தெடுக்காதீர்கள்’ என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பரப்புரையில் கமல்ஹாசன் பேசினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து இன்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே தனது வேனில் இருந்தபடி அங்கு கூடியிருந்தோர் மத்தியில் அவர் பேசினர். “ஊழலுக்கு மாற்றாக மற்றொரு ஊழலை தேர்வு செய்யாதீர்கள். மாறி மாறி பொய் பேசி ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் தமிழகத்தை கெடுத்து விட்டார்கள்.
தங்கள் கட்சி வேட்பாளர் உள்பட தாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்ய போகிறோம் என பேசுவதற்கு கூட துண்டு சீட்டை வைத்து கொண்டு படிக்கிறார்கள். ஏனென்றால் ஏற்கனவே என்ன பொய் சொல்லியுள்ளோம் என இவர்களுக்கு நினைவில் இருக்காது. பொய் சொல்ல நிறைய ஞாபக சக்தி தேவை என்பதால் எங்கே மறதியாக எதையாவது பேசி விடுவோமோ என்ற அச்சம் காரணமாகவே துண்டு சீட்டு தேவைப்படுகிறது.
திமுக ஆட்சியில் செய்ததை எல்லாம் நாங்கள் செய்யவில்லை இவர்கள் தான் செய்தார்கள் என பொய் பிரசாரம் செய்கிறார்கள். இரு தரப்பும் மாறி மாறி பொய் பேசுகிறார்கள். எங்களை ரெய்டு நடத்தி அச்சுறுத்த பார்கிறார்கள். அது என்னிடம் நடக்காது.
மனித மிருக மோதல்கள் அதிகரித்தபடி உள்ளது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. இவர்கள் மனிதர்களுக்கும் எதுவும் செய்யவில்லை மிருகங்களுக்கும் எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் கமிஷன் கிடைக்காத எதையும் இவர்கள் செய்வதில்லை. கொள்ளை கும்பலுக்கு மாற்றாக நேர்மைக்கு வாக்களியுங்கள்” என கமல்ஹாசன் பேசினார்.