நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரன் அணி சார்பில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு பின் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தன. பல்வேறு மாணவ அமைப்பினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில், நீட் தேர்வுக்கு எதிரான பொதுக்கூட்டம் செப்டம்பர் 8-ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், நீட் தேர்வுக்கு எதிராக சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் செப்டம்பர் 9-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அணி அறிவித்திருந்தது.
இதனிடையே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில், நீட் தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் டிடிவி தினகரன் தனது ஆர்ப்பாட்டத்தை அவராகவே ரத்து செய்தார். திமுக தலைமையிலான திருச்சி பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில் திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் தான், நீட் தேர்வுக்கு எதிராக, அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது தெளிவாக தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் வரும் 16-ஆம் பொதுக்கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது. டிடிவி தினகரன் அறிவித்துள்ள 16-ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானம் வேறுஒருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும், எனவே அன்றைய தினம் அனுமதி கொடுக்க முடியாது எனவும் திருச்சி மாநகராட்சி தெரிவித்து விட்டது. ஆனால், யாருக்கு அன்றைய தினம் இடம் ஒதுக்கப்பட்டது என்ற கேள்விக்கு திருச்சி மாநகாட்சி முறையாக பதில் சொல்லவில்லை என டிடிவி தினகரன் அணி தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த 9-ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் திருச்சியில் நீட் ஆதரவு பொதுக் கூட்டம் நடந்தது.