மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க தலைமைச் செயலக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில், ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது, 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணியை சந்திரபாபு நாயுடு உறுதி செய்தார்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்கும் பொருட்டு நவம்பர் 22 ஆம் தேதி டெல்லி ஆலோசனை கூட்டத்தை நடத்த சந்திரபாபு நாயுடு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் மோடி தலைமையிலான அரசை வீழ்த்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
அதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்தித்து சந்திரபாபு நாயுடு பேசி வந்தார்.
அந்த வரிசையில், கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க தலைமை செயலகத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது, 22ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்தார். முன்னதாக, நாட்டின் நலன் கருதியே பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியிருந்தார்.