அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவருக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், கைதான டிடிவி தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, கட்சிப் பணிகளை மீண்டும் தொடர்வேன் என அதிரடி பேட்டியும் கொடுத்தார். தொடர்ச்சியாக பழனிசாமிக்கு ஆதரவளித்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் அவரை சந்தித்து, தங்களின் ஆதரவை தெரிவித்து வந்ததால் டிடிவி-யின் செல்வாக்கு எம்எல்ஏ-க்கள் மத்தியில் உயர்ந்தது.
இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க, தன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது டிடிவி தினகரன் மீது, இவ்வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டிடிவி தினகரன் தான் தவறு செய்யவில்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை, வரும் 22 ஆம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்தார். ஏற்கனவே இரட்டை இலை தொடர்பான வழக்கிலிருந்தே ஜாமீனில் தான் வெளிவந்திருக்கிறார். தற்போது அந்நிய செலாவணி மோசடி வழக்கிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் இது டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை டிடிவி தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக வழக்குகளை பதிவு செய்தது. இது தொடர்பாக வழக்கு எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.