லோக்பால் அமைக்க வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அன்னாஹசாரே உடன் விவசாய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 6 ஆயிரம் பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அன்னாஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு டெல்லியில் நடத்திய காலவரையற்ற உண்ணா விரதம் நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு லோக்பால் சட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைப்பை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர் அந்த உண்ணாவிரதத்தை நடத்தினார். மத்திய அரசு உறுதி அளித்ததன் பேரில் பிறகு அவர் அந்த உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு லோக்பால் சட்டத்தை வலியுறுத்தியும், விவசாயிகளின் பிரச்னைகளுக்காகவும் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஹசாரே தொடங்கியுள்ளார். இந்தப் போராட்டமும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகின்றது. அன்னா ஹசாரே பேசுகையில், “மோடி அரசுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 43 கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால் எதற்கு பதில் கிட்டவில்லை. நாட்டில் விவசாயிகள் பேராபத்தில் உள்ளனர். அவர்களது பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அவர்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை” என்றார்.
கடந்த முறை ஹசாரே போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு அலை உருவானது. இது பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமைந்தது. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகவே ஹசாரே போராட்டத்தை கையிலெடுத்தார் என விமர்சனங்களும் எழுந்தது. ஹசாரேவின் உண்ணாவிரத்தில் அவருடன் இரண்டு முக்கிய ஆளுமைகள் இருந்தன. ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றொருவர் கிரன் பேடி. கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக மாறிவிட்டார். கிரன் பேடி ஆளுநராக மாறிவிட்டார். கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியை வீழ்த்திதான் டெல்லியில் ஆட்சியை பிடித்தார்.
தற்போது பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளதாக ஹசாரே கூறுகின்றார். ஆனால், இந்தப் போராட்டத்தின் பாதிப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்படுமா? அல்லது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறுமா என்பதை தேர்தல் முடிவுகள் தான் சொல்லும். இல்லை, இந்தப் போராட்டத்தில் இருந்து புதிய தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பதையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.