ஆந்திராவில் முகக்கவசம் அணிய அறிவுரைக் கூறிய பெண்ணை இரும்புக் கம்பியால் கண்மூடித்தனமாகத் தாக்கிய சுற்றுலாத்துறை அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. உலக அளவில் இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை 10,412,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 566,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த் தொற்றைப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு என்பதைத்தவிர வேறு வழியில்லை என மருத்துவர்கள் கூறிவருகின்றனர். மேலும் சமூக விலகல் என்பதை கடைப்பிடிக்க வேண்டி பலரும் கூறிவருகின்றனர்.
இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனிடையே மருத்துவ வல்லுநர்கள் ‘எஸ்.எம்.எஸ்’ என்ற ஒரு வழியைப் பின்பற்றுவதே தற்போதைக்கு தீர்வு எனக் கூறி வருகின்றன. அதாவது ‘சோஷியல் டிஸ்டன்ஸ்’, ‘மாஸ்க்’, ‘சானிடைசர்’ ஆகிய மூன்றும் அவசியம் எனக் கூறி வருகின்றனர்.’
அரசு வெளியிட்டு வரும் விளம்பரத்தில்கூட இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தினமும் தொலைபேசியில்கூட ஒவ்வொருமுறையும் ‘முகக்கவசம்’ அணியவேண்டும் என்பதைக் கூறிக்கொண்டே உள்ளனர்.
இந்நிலையில், முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியதற்காக ஒரு பெண் காட்டுமிராண்டித்தனமாக தக்கப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்துறையில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் உஷா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி பெண். இவர் பணிபுரியும் அலுவலகத்திற்குள் வந்த ஒருவரை ‘முகக்கவசம் அணிந்து உள்ளே வரும்படி’ அவர் கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேட்ட அந்த நபர் ஆத்திரம் கொண்டு மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரை நாற்காலியில் இருந்து கீழே தள்ளி இரும்பு கம்பியைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்குகிறார். அதைக் கண்ட சிலர் அவரை தடுத்து வெளியே அனுப்புகின்றனர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது.
இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணை தாக்கியவர் சுற்றுலாத்துறையில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து நெல்லூர் எஸ்.பி கூறுகையில், "சனிக்கிழமையன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார். காவல்துறை உடனடியாக குழுக்களை அனுப்பியுள்ளது. இன்று காலை குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்துள்ளோம். அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது”கூறியுள்ளார்.
ஐபிசியின் 354, 355, மற்றும் 324 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமான்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.