அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வெற்றிவேல் பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் இணைந்தார். அத்துடன் ஆர்.கே நகர் தொகுதியில் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2014ஆம் ஆண்டில் சொத்து வழக்கில் சிறை சென்று திரும்பிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்மூலம் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். அந்தத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பிளவுபட்டபோது டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அத்துடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர். பின்னர் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த இவர், அமமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.