பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு தன் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரையடுத்து போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையிலேயே கதிர்காமு முன் ஜாமீன் கோரியிருக்கிறார். கடந்த முறை டாக்டர் கதிர்காமு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கதிர்காமு மீது புகார் கொடுத்த பெண், கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி பெரியகுளத்தில் உள்ள கதிர்காமு மருத்துவமனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் வீடியோ படம் எடுத்து அதை வைத்து தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கான அமமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கதிர்காமு மீது நேற்று பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை நேற்று கதிர்காமு மறுத்துள்ளார். இதுகுறித்து கதிர்காமு நேற்று பெரியகுளத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இந்த வழக்கைச் சந்திக்க நான் தயாராக உள்ளேன். பெரியகுளம் தொகுதியில் அமமுகவுக்குப் பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அதைத் தடுப்பதற்காக இதுபோன்ற பொய்யான புகாரைப் பரப்பியிருக்கிறார்கள். இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனும் உடனிருந்தார்