மகாராஷ்டிரா மாநிலத்தின் மேம்பாட்டுக்காவும் நலனுக்காகவும் புதிய அரசு அமைந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சரானார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார்.
பதவி பிரமாணத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், பாரதிய ஜனதா கட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை என்றும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்வது நல்லதல்ல என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் முதல்வராக பதவியேற்று கொண்டுள்ள ஃபட்னாவிஸுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சராகியிருக்கும் அஜித் பவாருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த அரசாங்கம் மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் நலனில் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும். மாநிலத்தில் முன்னேற்றத்தின் புதிய தரத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா, தமது ட்விட்டரில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் பாஜக-தேசியவாத காங்கிரஸ் ஆட்சி மகாராஷ்டிராவில் புதிய உச்சத்தை எட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.