சாப்பிட உணவில்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்க இடம் இல்லாமல் பெரியோர்களாலேயே இருக்க முடியாமல் போகும். ஆனால் அடர்ந்த காட்டில் எந்த உதவியும் இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் இரண்டு நாட்கள் தவித்துக் கொண்டிருந்த 6 வயது சிறுமி எப்படி அந்த நிலையில் இருந்து மீண்டு வந்தார் என்பதை 22 ஆண்டுகள் கழித்து அதனை பகிர்ந்திருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹேலி ஸிகா என்ற பெண் ஒருவர் தான் ஆறு வயதாக இருக்கும் போது தனது தாத்தா பாட்டியுடன் தெற்கு அமெரிக்காவின் ஆர்கன்ஸாசில் உள்ள ஓஸார்க் தேசிய வனப் பூங்காவுக்கு கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி ட்ரிப்புக்காக சென்றிருக்கிறார்.
அப்போது நீர்வீழ்ச்சியை பார்க்கவில்லை என்பதால் அவரது தாத்தா பாட்டியிடம் பிரிந்து சென்றிருக்கிறார். அப்போதுதான் நடுக்காட்டில் தன்னந்தனியாக சிக்கியிருக்கிறார். தனியாக சென்று ஃபால்ஸை பார்ப்பதாகச் சென்ற ஸிகா வேறு வழியின்றி அடர்ந்த வனத்துக்குள் குடிக்க நீரும், சாப்பிட உணவும், தங்குவதற்கு இடமும் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு தவித்துப் போயிருக்கிறார்.
தன்னுடைய இந்த தவறான சாகச பயணம் குறித்து 22 ஆண்டுகள் கழித்து தனது 27வது வயதில் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஸிகா. அதில், “காட்டில் நான் தொலைந்ததில் இருந்து கற்பனையாக அலிசியா என்ற தோழியுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டேன். அவர் தான் என்னை அமைதியாக நேர்மறையாக யோசிக்க உதவினார்.
அன்றைய இரவு எதுவுமே இல்லாமல் ரொம்பவே கடுமையாக இருந்தது. ஆனால் வெறுமனே உட்கார்ந்து அழுவதற்கு பதிலாக காட்டில் யாரேனும் உதவ இருப்பார்களா என நினைத்து ட்ரெக்கிங் செய்தேன். அப்போதுதான் இரண்டாம் நாள் இரவன்று ஒரு குகையை கண்டறிந்து அங்கு தூங்கினேன்.
மேலும் அந்த காட்டுக்குள் இருக்கும் மரங்களையும், ஃப்ளமிங்கோ பறவைகளையும் என் குடும்பத்தினராக நினைத்துக்கொண்டேன்.” என ஹேலி ஸிகா கூறியிருக்கிறார்.
மேலும், “எவரேனும் நிச்சயம் உதவுவார்கள் என உண்மையில் நம்பினேன். அந்த எண்ணமே எதுவும் சரியாக நடக்காத வேளையிலும் என்னை பாசிட்டிவாக இருக்கச் செய்தது. அடிப்படையாகவே சாகச எண்ணம் உடையவள்தான் நான். இதுதான் ரிஸ்க் எடுப்பதை இப்போது வரை நிறுத்தாமல் கொண்டுச் செல்கிறது. பயத்தை நினைத்து ஒதுங்கி போகாமல் இருப்பதால்தான் எப்போதும் அனைவரிடமும் கனிவாக இருக்க வைக்கிறது” என்றும் ஸிகா தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக வனத்தில் 2 நாட்களாக சிக்கிய ஸிகா ஒரு வழியாக வில்லியம் ஜெஃப் மற்றும் ஜேம்ஸ் ஆகியோரால் கண்டறியப்பட்டார். ஹேலி ஸிகாவை கண்டதும் அவருக்கு கோகோ கோலாவை கொடுத்து பத்திரமாக மீட்டுச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.