தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைத்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்று முரளிதரராவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். கடந்த முறையும் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். அதேபோல், இந்த முறையும் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்” என்று கூறினார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது முரளிதரராவ் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.