ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார்.
இந்நிலையில், ஒரேநாடு; ஒரே தேர்தல் யோசனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று மாலை நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தை காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரும் கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.