மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அத்துடன் மேற்குவங்கத்தில் தற்போதைய நிலவரப்படி 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து ஆராய்ந்து பிறகே எங்களது கருத்துகளை பகிர்வோம். முதலில் தேர்தல் முடிவுகள் முழுமையாக முடிவடையட்டும். அத்துடன் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒப்பிடப்படவேண்டும்”எனக் கூறியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் வெறும் 2 இடங்களில் பாஜக வெற்றிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.