வெற்றி நினைப்பில் இருந்த மும்பை அணி - கடைசி நேரத்தில் ’ஷாக்’ கொடுத்த டெல்லி வீரர்கள்!

வெற்றி நினைப்பில் இருந்த மும்பை அணி - கடைசி நேரத்தில் ’ஷாக்’ கொடுத்த டெல்லி வீரர்கள்!
வெற்றி நினைப்பில் இருந்த மும்பை அணி - கடைசி நேரத்தில் ’ஷாக்’ கொடுத்த டெல்லி வீரர்கள்!
Published on

தோல்வியை எதிர்நோக்கி ஆடிக் கொண்டிருந்த டெல்லி அணியை அக்ஸர் பட்டேல், லலித் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தினர்.

ஐபிஎல் 2022 இன் 2வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி துவக்கத்திலேயெ அதிரடியாக விளையாடியது. கேப்டன் ரோகித் ஷர்மா பவர்பிளேவில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். மும்பை அணிக்கு அதிக விலைக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷனும் தனது பங்குக்கு பவர் பிளேவில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சரை விளாச 6 ஓவர்கள் முடிவில் 53 ரன்களை குவித்து கம்பீரமாக நின்றது மும்பை அணி. ஆனால் மிடில் ஓவர்களில் மும்பையை முடக்கிப் போட்டனர் குல்தீப் யாதவும் கலீல் அகமதுவும். குல்தீப் யாதவ் இந்த இணையை பிரித்து மும்பையில் அடித்தளத்தை தகர்த்தார். ரோகித் ஷர்மா குல்தீப் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பியது டெல்லி.

ஒருபக்கம் இஷான் கிஷன் தனியாளாக ரன்களை குவித்துக் கொண்டிருக்க, பார்ட்னர்ஷிப்-க்கு துணை நிற்க வேண்டியவர்கள் பெவிலியனுக்கு பேஷன் ஷோ நடத்த துவங்கினர். திலக் வர்மா மட்டும் சிறிது தாக்குப்பிடித்து ஆடினார். அடித்து ஆடவில்லை. ஆங்கர் இன்னிங்ஸ்தான். ஆனால் மற்றவர்கள் அதைக் கூட செய்யாததால் 190 ரன்களுக்கு மேல் சென்றிருக்க வேண்டிய மும்பையின் ஸ்கோர் 180க்கு உள்ளாகவே அடங்கியது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

178 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பசில் தம்பி, முருகன் அஸ்வினின் பந்துவீச்சில் டெல்லி அணியின் டாப் ஆர்டர் துவம்சம் ஆனது. 32 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது டெல்லி அணி. கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்புணர்ந்து பொறுமையாக ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். பிருத்வி ஷா மட்டும் தனியாக போராடிக் கொண்டிருக்க, அவருக்கு துணையாக வந்து நின்றார் லலித் யாதவ். இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்ட சிறிது சிறிதாக ஸ்கோர் உயரத் துவங்கியது. ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. பிருத்வி ஷா 38 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஷர்துல் தாகூர் 4 பவுண்டரிகளை கடகடவென அடித்துவிட்டு அவ்ளோதான் என அவுட்டாகி பெவிலியன் சென்றுவிட்டார். இப்போதுதான் களத்திற்கு வந்தார் அக்சர் படேல். துணையாக லலித் யாதவை வைத்துக் கொணடு பும்ராவின் பந்துவீச்சையே வெளுத்து வாங்கினார் அக்சர். அவ்வளவுதான்! மும்பையின் வெற்றிக் கனவை இருவரும் சேர்ந்து நிர்மூலமாக்கினர். 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி அணிக்கு வெற்றியை பரிசளித்தனர். 17 பந்துகளை மட்டுமே சந்தித்து 38 ரன்களை குவித்திருந்தார் அக்சர் படேல். லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களை குவித்து வெற்றிக்கு துணை நின்றார். இந்த இரு இளைஞர் கூட்டணியால் முதல் வெற்றியை பதிவு செய்து விட்டது டெல்லி கேப்பிடல்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com