ஏப்ரல் 6-ஆம் தேதி வரை எய்ம்ஸ் மருத்துவமனை என் கண்ட்ரோல்தான் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக சார்பில் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பாடி யாதவாழ் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “எம்.ஜி.ஆருக்கு அடுத்தப்படியாக அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், மருத்துவமனையிலேயே படுத்துக்கொண்டே வெல்ல உள்ளார். விரைவில் குணமடைந்து நன்றி சொல்ல அவர் வருவார். இரட்டை இலைக்கு விழுகின்ற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு விழுகின்ற ஓட்டு.
மதுரையில் மோடி மூன்று வருடத்திற்கு முன்பு செங்கல் நட்டுவைத்து சென்றார். நான் அந்த செங்கலை எடுத்து வந்திருக்கிறேன்.
கடந்த 10 நாட்களாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார்கள். 6ஆம் தேதி வரை எய்ம்ஸ் மருத்துவமனை எனது கண்ட்ரோலில் தான் இருக்கும். 7 ஆம் தேதி மருத்துவமனையை கொடுத்து விடுகிறேன்.
அதிமுக 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கின்றது. பாஜக 7 வருடங்களாக ஆட்சியில் இருக்கின்றது. இருவரும் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள். அமித்ஷாவிடம், என்னுடைய சொத்து முழுக்க அவரின் மகனின் பெயரில் எழுதி வைத்து விடுகிறேன். அவர் மகன் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் என் பெயரில் எழுதி வைக்க முடியுமா எனக் கேட்டேன். இதை எதிர்த்து கேட்ட என் தங்கை வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தினர். இறுதியில் அவர்கள் எடுத்துச் சென்றது ஒரு லட்ச ரூபாய் பணமும் தங்கை மகனுடைய ஜட்டியும் தான். அவர்களின் சோதனைக்கு பயப்படுவதற்கு நாங்கள் எடப்பாடி பழனிசாமியோ பன்னீர்செல்வமோ கிடையாது” என்றார்