அதிமுக முன்னாள் அமைச்சரும், தினகரன் அணியில் உள்ளவருமான செந்தில் பாலாஜி தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. விவசாய குடும்பத்தில் பிறந்து பி.காம் வரை படித்த அவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி 2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு அமைச்சர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். பின்னர், 2016 இல் அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆனார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. இறுதியில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒரு அணியாகவும், தினகரன் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதில், செந்தில் பாலாஜியும் ஒருவர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதிகளிலும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை மீண்டும் நிறுத்த தினகரன் திட்டமிட்டுள்ளார். அதற்கான கட்சிப் பணிகளை தினகரன் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவதற்காக தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீட்டிற்கு செல்லவில்லை.
இந்நிலையில்தான், முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியை உறுதி செய்வது போல் இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, அமமுக சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் சமீபகாலமாக அவர் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.
குறிப்பாக, ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டாவது, திமுகவில் செந்தில் பாலாஜி இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி செல்வது போன்ற புகைப்படம் வெளியானது.
இதனிடையே, செந்தில் பாலாஜியை கரூரில் உள்ள பலரும் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் பழினியப்பன் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுவது முக்கியமானது. இதனால், சென்னையில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணையவிருப்பதாக கூறப்படும் தகவல் உண்மையல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் மறுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசெந்தில் பாலாஜி தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தி தவறானது என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.