ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு பரப்புரை கூட்டத்தில் அதிமுக கொடியில் இடம்பெறாததால் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு பாஜக சார்பில் போட்டியிட பல்வேறு பெயர்கள் அடிபட்டாலும் இறுதியாக காங்கிரஸில் இருந்து விலகி சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. திமுகவின் கோட்டையாக கருத்தப்படும் ஆயிரம் விளக்கில் திமுக சார்பில் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எழிலனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஆயிரம் விளக்கு தொகுதியின் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு தோல்வி என்பது எனது அகராதியிலேயே இல்லை என்றும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.இந்நிலையில் நேற்று காம்தார் நகர் பகுதியிலும் இன்று சூளை மேடு பகுதியிலும் தீவிர பரப்புரையை மேற்கொண்டார். அவர் கலந்து கொண்ட பரப்புரையில் கூட்டணி தலைமை கட்சியான அதிமுகவின் கொடி இடம் பெறவில்லை. அதே நேரத்தில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தமாக, புரட்சி பாரதம் கொடிகள் இடம் பெற்றது. அதில் பாஜக கோடி அதிகமாக காணப்பட்டது.
இது குறித்து சூளைமேடு பிரதான சாலை பகுதியில் பரப்புரை மேற்கொண்ட குஷ்புவிடம் கேட்ட போது, அதிமுக நிர்வாகிகள் பலர் எனக்காக தற்போதும் இங்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். நேற்று துணை முதல்வர் என்னை ஆதரித்து பர்புரையில் ஈடுபட்டார். நாங்கள் இணக்கமாக இருக்கிறோம். உங்கள் குற்றச்சாட்டை ஏற்று கொள்ள முடியாது என்று கூறினார்.
- பால வெற்றிவேல்