45 நாட்களுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்தவருக்கு சீட்டா எனக்கூறி, விரக்தியில் நிர்வாகி ஒருவர் தான் கட்டியிருந்த அதிமுக கரைகொண்ட வேட்டியை, தீ வைத்து எரித்து விட்டு திமுக கரை வேட்டியை கட்டி அக்கட்சியில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் வடகாடு ஊராட்சியின் முன்னாள் தலைவராகவும் அதிமுகவின் கிளைக் கழக செயலாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக சார்பில் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 30-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கனகராஜுவும் தனக்கு சீட்டு வழங்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் விருப்பமனு அளித்திருந்தார். ஆனால் அதிமுகவில் நீண்டகாலமாக பயணித்த மூத்த நிர்வாகிகளுக்கு சீட் வழங்காமல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 45 நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த தர்ம தங்கவேல் என்பவரை அக்கட்சி தலைமை ஆலங்குடி தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆலங்குடி தொகுதிக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லும் வழியில் அதிமுகவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரிசையாக கூடி நின்று வேட்பாளரை மாற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 300-க்கும் மேற்பட்ட போலீசார் முதல்வர் அருகில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து சென்றபின் விரக்தியில் இருந்த கனகராஜ், தான் கட்டியிருந்த அதிமுக வேட்டியை கழற்றி, முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கிடாசலம் நினைவிடம் முன்பு தீயிட்டு எரித்துவிட்டு திமுக வேட்டியை கட்டிக்கொண்டு அக்கட்சியில் இணைந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.