அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 6 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா, இளங்கோவன், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தங்களது வேட்பு மனுவை அண்மையில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.