இராணுவீரர் இறந்ததாக சங்கரன்கோவில் அருகே உள்ள அவரது குடும்பத்தினருக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, அதன் உண்மை நிலவரம் கோரி இராணுவ வீரரின் தாய் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆயாள்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டியனின் மகன் முல்லைராஜ் (28). இவர் கடந்த 9 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் இவர் தற்போது காஷ்மீர் பகுதியில் உள்ள முல்லா மாவட்டத்தில் நௌகாம் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி பிற்பகல் முல்லைராஜின் தாயார் அழகாத்தாளுக்கு செல்போனில் தகவல் வந்துள்ளது. அதில் பேசியவர் முல்லைராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் அழகாத்தாள் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரது உறவினர்கள் தகவல் வந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபோது போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் தகவல் ஏதும் அறியாமல் முல்லைராஜின் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு அழகாத்தாள் தனது உறவினர்களுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர்தயாளனிடம் தனது மகனின் மரணம் குறித்து உண்மை நிலவரம் தெரிவிக்க உதவும்படி கண்ணீர் விட்டு கதறி அழுத்தார். உடனே அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து சென்னை அதிகாரிகளிடம் உடனே பேசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனிடையே மதிமுக பொதுச் செயலர் வைகோ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். முல்லைராஜ் இருப்பு மற்றும் உடல்நிலை குறித்து விசாரித்து உரிய தகவல் கிடைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.